அருட்தந்தை ஹரல்ட் ஜோன் வெபர் அடிகளாரின் உருவச்சிலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (04) திறந்து வைக்கப்பட்டது.
1914ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின், லூசியானா மாநிலத்தின்,நியூ ஓர்லீன்ஸ் நகரில் குடும்பத்தின் இரண்டாம் குழந்தையாக அருட் தந்தை ஹரல்ட் ஜோண் வெபர் பிறந்தார். இளவயதிலேயே தம்மை யேசு சபைத் துறவிகளோடு இணைத்துக் கொண்ட அவர், இயேசு சபையின் அழைப்பை ஏற்று, அருட் தந்தை மெக்னேயர் மற்றும் அருட் தந்தை ஹீனீ என்பாரோடு 1947 ஆம் ஆண்டில் இலங்கை வந்து சேர்ந்தார்.
1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டக்களப்பு மண் செய்த புண்ணியத்தின் பேறாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்குஎன பணி செய்ய வந்த இவரின் கவனம் வகுப்பறையின் நான்கு சுவர்களுள் மட்டும் அடங்காமல், விளையாட்டு பயிற்சிக் கூடங்களிலும் விழுந்தது. தடகளப் போட்டிகளில் மிகுந்த ஆர்வமும் கூர்ந்த அவதானமும் கொண்டிருந்த அவர் கல்லூரியின் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமன்றி சகல மெய்வல்லுனர் வீரர்களையும் பயிற்றுவிப்பதிலும் சிறப்பாக செயற்பட்டார்.
மட்டக்களப்பிற்கு ஒரு விளையாட்டு அரங்கு பற்றாக்குறை இருந்ததை கண்ட அருட்தந்தை வெபர் அடிகளார், மட்டக்களப்பு கோட்டைக்கு அண்மித்தாக, அங்கிலிக்கன் மிஸன் ஆலயம் மற்றும் வின்சன்ட் மகளீர் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு முன்னால் சதுப்பு நிலமாகக் கிடந்த ஒர் சேமக்காலையை இடம் மாற்றி 1960களின் ஆரம்பத்தில் கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை மைதானமாக மாற்றியிருந்ததோடு, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம் மைதானத்திற்கு வந்து தம் கைகளால் கல்லும் முள்ளும் பொறுக்கி அதன் தரத்தை மேம்படுத்தியிருந்தார். அத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணிகளின் பேறாக அவர் வாழும்போதே அந்த மைதானம் “வெபர் ஸ்டேடியம்” என பெயரிடப்பட்டது.
இரண்டு தடவைகளில் தொண்டையில் புற்று நோய்க்கான சத்திர சிகிச்சை இவர் பிறந்த மண்ணில் நடாத்தப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் அவரது வைத்தியர்கள், உறவினர்கள், நண்பர்கள், இயேசு சபையினர் அவரை அமெரிக்காவிலேயே தங்கிவிடும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள். இருந்தும், “நான் இறப்பதாக இருந்தாலும் மட்டக்களப்பு மண்ணிலேயே அது இடம்பெற வேண்டும்” என்று கூறி அதற்கேற்;ப இறுதிவரை இதே மண்ணில் வாழ்ந்து 1998 ஆம் ஆண்டில், அவர் தன்னை இறைவனிடம் ஒப்படைத்துக் கொண்டார்.
இத்தகைய மகத்தான சேவை புரிந்த ஓர் மகானின் திருவுருவச் சிலையினை அவரால் உருவாக்கப்பட்ட இதே வெபர் அரங்கில் நிறுவ வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால் வெபர் அடிகளாரின் இத் திருவுருவச் சிலையானது நிறுவப்பட்டது.
மேற்படி திருவுருவ சிலையானது விளையாட்டு வீரர்கள், சாரண மாணவர்கள், பழைய மாணவர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு. வீ.ஈஸ்வரன், பாடசாலைகளின் அதிபர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், கௌரவ உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் திரு.உ.சிவராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க. கருணாகரன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி. எல்.பிரசாந்தன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார், மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தி.சரவணபவன், கௌரவ பிரதி முதல்வர் திரு. க. சத்தியசீலன், அருட் தந்தையர்கள், யேசு சபையின் மேலாளர் அருட்தந்தை டி.சகாயநாதன் உள்ளிட்டோரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.