மட்டக்களப்பு மாநகர சபையின் பௌர்ணமி கலை விழாவானது கடந்த 07 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
மாநகர சபையின் கலை, கலாசார குழுத்தலைவரும், கௌரவ உறுப்பினருமான திரு.எம் . சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பௌர்ணமிக் கலை விழா நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன், கௌரவ பிரதி முதல்வர் திரு.க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் திரு. உ . சிவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் மாநகர கீதம் பாடப்பட்டு ஆரம்பமான பௌர்ணமிக் கலை விழாவில் கதிரவன் கலைக் கழகத்தின் தமிழ் மொழி வாழ்த்து, புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம், கதிரவன் பட்டிமன்றம், கதிரவன் கலைக்கழகத்தின் கொம்புமுறி பாடல், கதிரவன் தமிழ் நடிகர்களின் நகைச்சுவை நாடகம் என தமிழர் கலை-கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் முழுக்க முழுக்க பார்வையாளர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பௌர்ணமி கலை விழாவில் நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்த ஆசிரியர்கள், நிகழ்வுகளில் கலந்துகொண்ட கலைஞர்கள், தொகுப்பாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.