மட்டக்களப்பு மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட வரைபினை தயாரிப்பதற்கான வரியிறுப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடலானது மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் க. சத்தியசீலன் தலைமையில் இன்று (15) செவ்வாய்க் கிழமை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திரு.உ.சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி.ஹெலன் சிவராஜா, மாநகர நிதி நிலையியற் குழுவின் கௌரவ அங்கத்தவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக நடைமுறையில் உள்ள பாதீட்டில் மூலமாக நிறைவுறுத்தப்பட்டுள்ள வேலைகள் , நிலுவை வேலைகள் தொடர்பிலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலமைகளினால் எதிர்பார்க்கை வருமான இழப்புகள் தொடர்பிலும் மாநகர சபையின் பிரதம கணக்காளரால் சபையோருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன். எதிர்வரும் ஆண்டுக்கான முன்மொழிவுகளும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன. மேற்படி கருத்து பதிவுகளுடன் வரவு செலவுத் திட்ட வரைவு அறிக்கையானது எதிர்வரும் மார்கழி மாதமளவில் மாநகர சபையின் விசேட பொது அமர்வில் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.