விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வர்ண கௌரவிப்பு விழா

2020-01-01

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வர்ண கௌரவிப்பு விழாவானது நேற்று (30.12.2019) மாலை பாடுமீன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டு நிலையியற் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விழாவில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது திறமைகளை வெளிக்காட்டிய 15 வீர வீராங்கனைகளும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இலங்கை கபடி அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி தமது திறமைகளை வெளிப்படுத்திய கே.சினோதரன், துரைசாமி மதன்சிங், லக்ஸ்மன் மோகன் தனுசன், இலங்கைக் கூடைப்பந்தாட்ட அணியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிதிறமைகளை வெளிப்படுத்திய திமோதி நிதுசன் மற்றும் இலங்கை உதைபந்தாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய எம்.எம்.முஸ்தாக், எம்.எஸ்.இசதீன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இம்முறை இடம்பெற்ற 45ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்புக்கு மாவட்டத்திற்கு பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்த்த வீர, வீரங்கனைகளும் கௌரவிக்கப்பட்டனர்.

அந்தவகையில் பெண்களுக்கான கடற்கரைக் கபடிப் போட்டியில் விளையாடி தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்ட துருபாதம் சோபினி, மகேந்திரராசா கோகலிகா, உதயகுமார் இந்திக்கா, சார்குணசீலன் ஜதுசிக்கா, ராசா கஜேந்தினி, செந்தில்நாதன் கோகுலவாணி, ஆகியோரும் ஆண்களுக்கான கபடிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்ட எல்.எம்.சஜீபன், சில்வெஸ்டர் அனபாயன் ஆகியோரும் தேசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்ட எஸ்.சிவபாலன், மற்றும் வூசு போட்டியில் வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்ட ஜே.கிருஸ்ணா ஆகியோரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பயிற்றுவிப்பாளர்களான துரைசாமி மதன்சிங், வி.திருச்செல்வம், துரைசிங்கம் மதன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவாராசா, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டுத் துறைசார் உத்தியோகத்தர்களும் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் விளையாட்டு வீரரர்களுக்கான கௌரவிப்புகளையும் வழங்கியிருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks