கொரொனா தொற்றிலிருந்து மக்களைக்காக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் மாநகர சபைக்கு மட்டு.சிவில் சமுகம் பாராட்டு

2020-05-07

கொரொனா அச்சத்திலிருந்து மட்டக்களப்பு மக்களைப் பாதுகாக்கும் பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமுகத்தினர் தமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

நிலவும் கொரொனா அச்ச நிலமைகள் குறித்தும், இது தொடர்பில் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மட்டக்களப்பு சிவில் சமுகத்தினர் இன்று (06.05.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது உலக நாடுகளில் மிக வேகமாகப் பரவிவரும் கொரொனா நோய்த் தொற்றிலிருந்து முழு நாட்டினையும் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையானது காத்திரமான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்காக மட்டக்களப்பு வாழ் மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மட்டக்களப்பு சிவில் சமுகத்தினர் தெரிவித்தனர்.

குறிப்பாக மாநகர முதல்வரின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள், சுகாதார பிரிவினர் அனைவரும் இரவு பகல் பாராது தமது பணியினை முன்னெடுத்து வருவதாகவும், ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தினை இழந்து தவிக்கும் மக்களுக்கு தமது அதிகாரத்துக்கு அப்பால் மனிதாபிமான உதவிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியதோடு இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் சிவில் சமுகத்தினரும் தமது ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

குறித்த சந்திப்பில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், இரா.அசோக் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமுக செயற்பாட்டளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks