பௌர்ணமி கலை விழா

2022-10-17

மட்டக்களப்பு மாநகர சபையின் பௌர்ணமி கலை விழாவானது கடந்த 09 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.

மாநகர சபையின் கலை, கலாசார குழுத்தலைவரும், கௌரவ உறுப்பினருமான திரு.எம் . சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பௌர்ணமிக் கலை விழா நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன், கௌரவ பிரதி முதல்வர் திரு.க.சத்தியசீலன், மாநகர ஆணையார் திரு. நா .மதிவண்ணன் , பிரதி ஆணையாளர் திரு. உ .சிவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். மங்கள விளக்கேற்றலுடன் மாநகர கீதம் பாடப்பட்டு ஆரம்பமான பௌர்ணமிக் கலை விழாவில் வரவேற்பு உரையினை கௌரவ பிரதி முதல்வர் நிகழ்த்த, தலைமை உரையினை கலை, கலாசார குழுத்தலைவர் ஆற்றியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கலை கலாசாரத்தினையும், தமிழர்களின் பண்பாட்டு கலை இலக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் 2018 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று நடாத்தப்பட்டு வந்த பௌர்ணமிக் கலை விழா கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் மட்டக்களப்பு மாநகர சபையினால் 2022 ஆம் ஆண்டு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் இப் பௌர்ணமிக் கலை விழா மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர்களின் பாடல், நர்த்தன நாட்டியம், நாடகம், ரிதமிக் நடனம், சிலம்பாட்டம் போன்ற கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு. கா. சித்திரவேல் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks