யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டிம் சுட்டான் இன்று 12.02.2019 மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
யுனிசெப் நிறுவனத்தின் ஆதரவில் மட்டக்களப்பு மாநகரினை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கும் நோக்கோடு இந்த உத்தியோகபூர்வ விஜயமானது அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் யுனிசெப் நிறுவனத்தின் பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா, மாநகர சபையின் ஆணையாளர் திரு.காசி சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ரோகினி விக்ணேஸ்வரன் உள்ளிட்ட மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாநகருக்குள் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு சிறுவர் நேய மாநகரமாக மாற்றும் செயற்பாட்டிற்கு பூரண ஆலோசனைகளையும், நிதி வசதிகளையும் வளங்கும் நோக்கில் மேற்படி கலந்துரையாடல் அமைந்திருந்தது.