வறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்றும் (28.02.2019) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டிக்களி தமிழ் வித்தியாலயம் மற்றும் நாவலடி கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
குறித்த பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்களான சீ.ஜெயந்திரகுமார், பே.சுரேஸ்குமார் ஆகியோருடன், மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.