திராய்மடு ஸ்ரீ பத்தினி அம்மன் ஆலய 2ஆம் குறுக்கு வீதி, மற்றும் அமிர்தகழி சுக்குறு வீதி என்பன கம்பெறலிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொங்றிட் வீதியான அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் தற்போது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கம்பெறலிய துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமிர்தகழி சுக்குறு வீதியும், 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திராய்மடு ஸ்ரீ பத்தினி அம்மன் ஆலய வீதியும், கொங்றிட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மக்களுக்கான வீதி அபிவிருத்தி பணிகளை அனைத்து அரச திணைக்களங்களும் கையாள்வது போன்று ஒப்பந்தம் வழங்கி விட்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர்த்து இவ் அபிவிருத்தி பணிகளை மாநகர சபையே பொறுப்பெற்று தம்மிடமுள்ள ஆளனி மற்றும் இயந்திர வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி மேற்கொள்வதாகவும், இதனால் ஏற்படக் கூடிய நிர்வாக செலவுகள், மற்றும் ஒப்பந்த தரகுப்பண வழங்கல்கள் என்பவற்றையும் தவிர்த்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பணமானது முழுமையாக அவ் வீதி வேலையிலேயே பயன்படுத்தப்பட்டதன் ஊடாக மதிப்பீட்டு திட்டமிடப்பட்ட வீதியின் நீளத்தை விட 25% தொடக்கம் 45% வீதமான வேலைகளை மேலதிகமாக மேற்கொள்ள முடிவதாகவும் மாநகர முதல்வர் இங்கு கருத்து தெரிவித்தர்.
இத்தகைய செயற்பாடுகளை அவதானித்த அமைச்சுகளின் செயலாளர்கள் இதே போன்று மத்தியரசின் ஊடாக வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தினை இதே நடைமுறையில் நேரடியாக மாநகர சபையே மேற்கொள்வதற்கான அனுமதியையும், சிபார்சுகளையும் வழங்கியுள்ளமையால் கம்பெரலிய திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளுக்கான வேலைகளை மாநகர சபையே பொறுப்பேற்று மெற்கொண்டு வருவதாகவும், இதனால் மத்தியரசின் ஒதுக்கீடுகளை நேரடியாக உள்ளுராட்சி மன்றம் ஒன்றிற்கு வழங்கும் நடைமுறையை முதற்தடைவையாக மட்டக்களப்பு மாநரக சபையின் வினைத்திறனான ஊழலற்ற செயற்பாடுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான தம்பிராஜா இராஜேந்திரன், ஐயாத்துரை சிறிதரன், துரை மதன், மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன், தொழிநுட்ப உத்தியோகத்தர் ச.ராஜகுமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.