மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (19.07.2019) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (22) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 31 புதன்கிழமை ஆடி அமாவாசைத் தீர்த்ததுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு அடியார்களின் சுகாதார நலன் கருதி மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்படி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதானப் பணியில் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சமுக நலன்விரும்பிகள் எனப் பலரும் ஈடுபட்டிருந்தனர்.
கனரக வாகனங்களைக் கொண்டு ஆலயத்தின் வளாகத்தில் காணப்பட்ட புதர்கள், குப்பைகள் என்பன அகற்றப்பட்டதுடன் இதன்போது குன்றும் குழியுமாகக் காணப்பட்ட நிலமும் சமப்படுத்தப்பட்டு, ஆலயத்தினைச் சூழவுள்ள தீர்த்தக் குளம், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் என்பனவும் மாநகர சபையின் ஊழியர்களினால் துப்பரவு செய்யப்பட்டன.