யுனிசெப் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையிலான குழவினர் தென்கொரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபையானது, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரினை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்றிட்ட அமர்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான குழுவினர் தென்கொரியாவின் சீயோல் நகருக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக சீயோல் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிறுவர்நேய நகருக்கான நிர்வாகக் கட்டமைப்புகளை பார்வையிடுவதோடு, தற்கால நவீன தகவல் தொழிநுட்பம் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபையுடன் புரிந்துணர்வு உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் மேற்படி விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேற்படிக் கூட்டத்தொடரில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், நிர்வாக உத்தியோகத்தர் ரோகிணி விக்ணேஸ்வரன் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.