மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க புகையிரத நிலைய ஒழுங்கையானது துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றமையால் அப்பாதையில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாசஸ்தலம் ஒன்று முற்றாக உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் சுட்டிக்காட்டி மேற்படி கட்டிடத்தினை வேறு ஒரு இடத்தில் புதிதாக அமைப்பதற்கான நிதியைப் பெற்றுத் தருமாறு மாநகர முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் துரித கிராம அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வாசஸ்தலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இன்று மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் திருமதி.கலைவாணி வண்ணியசிங்கம், பொறியியலாளர் பத்மராஜா, மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கான வே.தவராஜா, ம.ரூபாகரன், இவேட்டின் சந்திரகுமார், சீ.ஜெயந்திரகுமார், திருமதி குஜாஜினி பாலகிருஸ்ணன் ஆகியோருடன் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.