யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி எம்மி ப்றஃகம் இன்று (20.09.2019) மட்டக்களப்பு மாநகர சபைக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுவர் நேய மாநகர கருத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் மாநகர முதல்வருடன் கலந்துரையாடுவதற்காக யுனிசெப் நிறுவனத்தின் சார்பில் மேற்படி விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னர் பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார ரீதியிலான சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவ்வாறான குடும்பங்களுக்கான சுய தொழில் வழிகாட்டல்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், இடைவிலகல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் மாநகர நிர்வாக எல்லைக்குள் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனைகளைக் குறைக்கும் நோக்கில் துணியிலான பைகள் மற்றும் பிரம்புக் கூடைகளை உற்பத்தி செய்வதன் ஊடாக பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல் உட்பட சுற்றுச் சூழல் பாதுகாப்பினை பேணுவதற்கான முன்மொழிவுகளும், அது தொடர்பில் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடைமுறைகள் தொடர்பிலும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டன.
மேற்படிக் கலந்துரையாடலில் யுனிசெப் நிறுவனத்தின் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்.அன்ருவ், பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா, மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ரோகினி விக்ணேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாறியிருந்தனர்.