மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய வீதி மற்றும் அப்துர் றஃமான் வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் ஓர் அம்சமாக 16ஆம் வட்டாரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய வீதி மற்றும் அப்துர் றஃமான் வீதிகளை கொங்றிட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
3 மில்லியன் ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 265 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை கௌரவ மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான முகமட் நிப்லார், துரை மதன் மற்றும் மாநகர கௌரவ பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்ததாகவும், தற்போது இவ் வீதியை புனரமைத்து தந்த மாநகர முதல்வருக்கும் உறுப்பினருக்கும் குறித்த வட்டார பொது மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
அத்துடன் வீதி அபிவிருத்தி பணிகளை வழமையான நடைமுறையின் கீழ் ஒப்பந்தம் வழங்கும் செயன்முறையை தவிர்த்து நேரடியாக மாநகர சபையே பொறுப்பெற்று தம்மிடமுள்ள ஆளனி மற்றும் இயந்திர வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி மேலதிகமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றமைக்கும் தமது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.