மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட விஜயபுரம் குறுக்கு வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் ஓர் அம்சமாக 08ஆம் வட்டாரத்திற்குட்பட்ட விஜயபுரம் விகாரை குறுக்கு வீதியினை கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மாநகரசபை உறுப்பினர் துரை மதனின் வேண்டுகோளிற்கிணங்க கிட்டத்தட்ட 1 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் துரை மதன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் குன்றும் குழியுமாக காணப்பட்ட குறித்த வீதியினை உடனடியாக புனரமைத்து தந்தமைக்கு மாநகர முதல்வருக்கும், குறித்த வட்டார உறுப்பினருக்கும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
அத்துடன் வீதி அபிவிருத்தி பணிகளை வழமையான நடைமுறையின் கீழ் ஒப்பந்தம் வழங்கும் செயன்முறையை தவிர்த்து நேரடியாக மாநகர சபையே பொறுப்பெற்று தம்மிடமுள்ள ஆளனி மற்றும் இயந்திர வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி மேலதிகமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றமைக்கும் தமது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.