எம்மை நாமே ஆழக்கூடிய ஓர் வல்லமையைத் தரும் ஆண்டாக பிறந்திருக்கும் 2020 ஆம் ஆண்டு அமைய வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எமது தமிழ் சமுகமானது போருக்கு பின் பத்தாண்டுகளைக் கடந்து பதினோராவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கின்ற இந்த சூழ்நிலையில் சமுதாய, கலாசார, அரசியல் ரீதியாக ஒவ்வொருவருடைய உரிமைகளும், பொறுப்புக்களும் கிடைக்கப்பெற வேண்டிய ஒரு வருடமாக இந்த 2020 ஆம் ஆண்டானது அமைய வேண்டுமென்று நான் பிரார்த்திக்கின்றேன்.
இந்த நாட்டினை எந்த அரசாங்கம் ஆண்டாலும் எமது தாயகப் பகுதிகளை எம்மை நாமே ஆழ வேண்டும். அதற்குரிய மக்கள் ஆணையினை எமக்கு வழங்குவதோடு, நிதி வழங்குனர்களும் எமது பிரதேசத்தின் பால் அக்கறை கொண்டு தேசியம் சிதைவடையாமல் பேண்தகு அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றேன்.
குறிப்பாக சொந்த மண்ணில் தமிழ் பேசும் சமுகங்களின் தனித்துவம் தொடர்ந்தும் பேணப்படுவதோடு, தத்தம் கலாசாரங்களைப் பின்பற்றி பெரும்பான்மை சமுகத்தினருக்கு இணையாக சிறுபான்மையின மக்களும் அச்சமின்றி இந்த நாட்டில் வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும்.
அத்துடன் வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து எமது மட்டக்களப்பு மாநகரினை ஓர் முன்மாதிரியான மாநகரமாகவும், முதன்மை மாநகரமாகவும் கட்டியெழுப்ப அனைவரது ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கின்றேன்.
இந்த இனிய புத்தாண்டில், அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும் என்று வாழ்த்தி, உறவுகள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.