மட்டு மாநகர சபையினால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவுக் கூப்பன்களை வழங்கும் நிகழ்வு

2020-01-14

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதிகின்ற மக்களின் சனத்தொகை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவுக் கூப்பன்களை வழங்கும் நிகழ்வானது இன்று (13.01.2019) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மாநகருக்குள் பிறக்கும் பிள்ளைகளின் வளர்ச்சி, அதன் கல்விச் செயற்பாடு என்பவற்றை நோக்காகக் கொண்டு 2019 ஆம் ஆண்டு முதல் பிரசவிக்கும் மூன்றாவது குழந்தைகளுக்குரிய கொடுப்பனவுகளை மட்டக்களப்பு மாநகர சபையானது வழங்கும் என மாநகர முதல்வரால் ஏற்கனவே அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட 125 குழந்தைகளுக்கான சத்துணவுக் கூப்பன்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படிக் கொடுப்பனவுகளை கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் மற்றும் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்ற காரணங்களால் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகள் கிடைக்கத் தாமதம் ஆனதாகவும், தற்போது தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு கிடைக்கப் பெற்ற நிதியினைக் கொண்டு ஒருகட்ட உதவிகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மேலும் இந்த கொடுப்பனவுகளை வழங்க பங்களிப்பு செய்த அரசசார்பற்ற நிறுவனங்கள் முக்கியமாக கனடாவைச் சேர்ந்த திரு விமலநாதன் (கண்ணன்) அவர்களுக்கும் மற்றும் சத்துணா நிறுவனத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சத்துணவுக் கூப்பன்களை வழங்கி வைத்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks