அறிவுறுத்தல்களை மீறும் வர்த்தக நிலையங்களுக்கு சீல் : மட்டு முதல்வர் எச்சரிக்கை

2020-04-15

கொரனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் எச்சரித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (15.04.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாளை தற்காலிகமாக ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை வழமை போன்று மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம், கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானம், ஊறணி சரஸ்வதி வித்தியாலய மைதானம் மற்றும் தாண்டவன்வெளி லீனியம் பூங்கா ஆகிய நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சந்தைகளிலும் பல்பொருள் வணிகங்களிலும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

இந்த முன்னெடுப்புகளுக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். குறிப்பாக சமுக இடைவெளியைப் பின்பெற்ற வேண்டும். 99மூ கல்வி கற்ற சமுகம் உள்ள இந்த பிரதேசத்தில் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் ஒழுங்காக பின்பெற்ற வேண்டும்.

இதேபோன்று அத்தியவசிய பலசரக்குக் கடைகளும், மருந்தகங்களும், பழக்கடைகளும் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கடைகளும் தமது வியாபார செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். கடந்த முறை எமது கள விஜயத்தின் போதும் சில விடயங்கள் அவதானிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை அந்த நடவடிக்கைகள் மேலும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன்படி அரச அறிவுறுத்தல்களை மீறி வியாபாரங்களில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை முத்திரையிடுவதற்கான (சீல்) அனுமதிகளையும், ஏற்பாடுகளை பெற்றுள்ளோம்.

எனவே அறிவுறுத்தல்களுக்கு அமைய தங்களது வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக சமுகத்தினரைக் கேட்டுக்கொள்கின்றோம். எனத் தெரிவித்தார்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks