பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே கொரொனா நோய் தொற்றிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தினை பாதுகாக்க முடியும். இதை விடுத்து இப்பிரச்சனை முதல்வருக்குரியதோ அல்லது அதிகாரிகளுக்குரியதோ என கருதி நடந்தால் எதனையும் மேற்கொள்ள முடியாது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
நாடு பூராகவும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது இன்று (06.04.2020) தற்காலிகமாக 19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குள் சனநெரிசலினைக் குறைத்து சமூக இடைவெளியினைப் பேணும் முகமாக நான்கு விற்பனைச் சந்தைகளையும் அமைத்து இவற்றை சீர் செய்யும் நடவடிக்கைகளில் மாநகர சபையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தனர். குறித்த இடங்களுக்கு களவிஜயத்தினை மேற்கொண்ட மாநகர முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கருத்துரைத்தார்,
உலக சுகாதார நிறுவனம் கொரோணா வைரஸை உலகத் தொற்று நோயாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்து நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்காக தங்களது சமூகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
பொது மக்களின் சுகாதார நலன் கருதி சுகாதார வைத்தி அதிகாரியின் தொழில்நுட்ப ஆலோசனைக்கிணங்க பல்வேறு பொறிமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு இவற்றிக்கு கட்டுப்படாத வீதியோர வியாபாரிகளின் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்கு எதிரா நடவடிக்கைகளுக் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை மாநகர சுகாதாரப் பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து பல்வேறு தொண்டர் அமைப்புக்களின் பங்களிப்புடன் சன நடமாட்டம் மிக்க இடங்களில் சமூக இடைவெளியைப் பேணுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலானோர் சமூக இடைவெளியினைப் பேணி தமது அத்தியவசியத் தேவைகளை பூர்த்திசெய்து வந்தாலும் சிலர் அவற்றைக் குழப்பும் விதமாகவே செயற்பட்டு வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது. உண்மையில் பொதுமக்களினதும், வர்த்தகர்களினதும் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே கொரொனா நோய் தொற்றிலிருந்து எமது மட்டக்களப்பு மாவட்டத்தினை பாதுகாக்க முடியும். இதை விடுத்து இப்பிரச்சனை முதல்வருக்குரிய தனிப்பட்ட பிரச்சனை என்றோ அல்லது அதிகாரிகளுக்குரிய பிரச்சனை என்றோ கருதி நடந்தால் எம்மால் தனித்து எதனையும் மேற்கொள்ள முடியாது என தெரிவித்தார்.