மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரதான வடிகான் சுத்தம் செய்யும் பணிகள் இன்று மட்டக்களப்பு- பூம்புகார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் சுகாதார நெறிமுறையினை பேணும் பொருட்டும், அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் வடிகான் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மாநகர சுகாதாரத் துறைத் தலைவர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறும் குறித்த சுத்தம் செய்யும் நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் ஸ்டீபன் ராஜன், சூசைமுத்து பிலிப் ஆகியோரும் மாநகர சுத்தம் செய்யும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் தி.சரவணபவன் அவர்கள்; தங்களிடம் உள்ள ஆளணிகளைக் கொண்டு வடிகான் சுத்தம் செய்யும் பணிகளை முன்னெடுத்துள்ளோம், மட்டக்களப்பு மாநகரத்தினுள் டெங்கு தொற்றுவது அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் வட்டார உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகளவாக மண் அடைத்து போயுள்ள வடிகான்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. அதே போல் பொதுமக்களும் வடிகான்களில் குப்பைகளை போடாது பாதுகாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் பூம்புகார், இருதயபுரம் மற்றும் நாவற்குடா கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பல மில்லியன் செலவில் வடிகான்கள் கட்டுவதற்கு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.