மட்டக்களப்பில் வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களை பிடித்து பராமரிக்கும் திட்டம்- மாநகர முதல்வர்

2020-06-12

மட்டக்களப்பில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளை போன்று பராமரிப்பு இல்லாத கட்டாக்காலி நாய்களும் வீதியால் பிரயாணம் செய்யும் மக்களுக்கும் மற்றும் வாகனங்களுக்கும் பெரும் அசௌகரியமாக உள்ளது. மாடுகளை பிடிப்பது போன்று கட்டாக்காலி நாய்களை பிடித்து அவைகளை பராமரிப்பதற்கான திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையால் கொண்டுவரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 34 ஆவது அமர்வு நேற்று(11) நடைபெற்றது. இதில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ஜேம்ஸ் நவரெட்ணராஜா திலீப்குமார் அவர்கள் கட்டாக்காலி நாய்கள் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாகவும், இதனை தடுக்க முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

குறித்த விடயத்திற்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் பதில் அளிக்கையில்; கட்டாக்காலி நாய்களை பிடித்து பராமரிப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுடன் பேசியுள்ளதாகவும், நாய்களை பராமரிக்கும் திட்டம் வெகுவிரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வீதிகளில் பொதுமக்கள் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய்களும் திரிவதாகவும் அவற்றுக்கு சொந்தக்காரர்கள் பதிவு ஒன்றை செய்து பராமரிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்த வளர்ப்பு நாய்களும் பிடிக்கப்பட்டு மாநகர பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

வீதி விபத்துக்களை உண்டுபண்ணும் கட்டாக்காலி நாய்களை பிடித்து அவற்றை பராமரிப்பதற்கான நிலையம் உருவாக்கப்பட்டு அவை பராமரிக்கப்படும் போது விபத்துக்கள் குறைந்து, காயங்கள் மற்றும் உயிர்சேதங்கள் என்பன தவிர்க்கப்படுவதுடன் சூழலும் சுத்தமாக இருக்கும்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks