கரையோர பிரதேசங்களில் ஏற்படும் சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையில் பிரதேச கரையோர பாதுகாப்பு குழு நிறுவப்பட்டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் கரையோர மற்றும் துறைமுக கழிவு முகாமைத்துவக் குழுக்களை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச குழுக்களை நிறுவும் ஆரம்ப அமர்வானது இன்று (28) மட்டக்களப்பு மாநகர சபையின் குழு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு, மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், மீன்பிடி நீரியல் வள திணைக்களம், பிரதேச சுற்றாடல் அமைப்புகள் என பல நிறுவனங்களின் அங்கத்துவத்துடன் இக்குழுவானது நிறுவப்பட்டுள்ளதுடன். இக்குழுவின் தலைவராக மாநகர முதல்வர் செயற்படவுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் கரையோர வலயங்களில் இடம்பெறும் சுற்றாடல் மாசடைவினை கட்டுப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான நாட்டினை கையளிக்கும் தூரநோக்கோடு இக் குழுவானது செயற்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்தார்.
குறிப்பாக கழிவு நீரினை சட்டவிரோதமாக நீர் நிலைகளுக்குள் இடுதல், மற்றும் சட்டவிரோதமாக கரையோர பகுதிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோரை பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் கண்காணித்து ஒவ்வொரு திணைக்களத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.