மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கருவேப்பங்கேணி ஜெயந்தி வீதியின் இணைப்பு வீதிகள் உள்ளிட்ட மூன்று வீதிகளை கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபையின் 06ஆம் வட்டார உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவின் வேண்டுகோளிற்கிணங்க மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக கருவேப்பங்கேணி ஜெயந்தி வீதியின் 1ஆம், 2ஆம் குறுக்கு இணைப்பு வீதிகள் மற்றும் நாவலர் வீதியின் 3ஆம் குறுக்கு ஆகிய மூன்று வீதிகளை கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இவ்வீதிகளின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபையின் உறுப்பினரும், வேலைகள் மற்றும் அபிவிருத்தி நிலையியற் குழுவின் தலைவருமான வி.பூபாலராஜா, மாநகர சபை உறுப்பினர்களான வே. தவராஜா, துரைசிங்கம் மதன், வேலை மேற்பார்வையாளர் க.குணராஜா மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
பொது மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் வீதி அபிவிருத்தி பணிகளை சில அரசியல் கட்சி சார்ந்தவர்கள் தமது கட்சிதான் மேற்கொண்டு வருவதாக மக்கள் மத்தியில் கூறி வருவதாக நாம் அறிகின்றோம். அது தொடர்பில் பொதுமக்கள் விளிப்புடன் இருக்க வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா கருத்து தெரிவித்தார்.
அத்துடன் கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் காணப்பட்ட பல வீதிகள் மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும். ஏனைய வீதிகளையும் எதிர்காலத்தில் செப்பனிட உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.