.
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்புக்கான அமர்வானது மாநகர சபை கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் (15.12.2020) அன்று நடைபெற்றது..
கடந்த 03 ஆம் திகதி விசேட அமர்வின் ஊடாக கௌரவ முதல்வரினால் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் பலர் திருத்தங்களை முன்வைத்ததன் காரணமாக அந்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் வரவு செலவு திட்டம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படுவதாகவும் அவற்றிற்கு ஆதரவு வழங்குமாறு மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது..
அதனை தொடர்ந்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்..
இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஐந்து உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும், ஈபிடிபி ஒரு உறுப்பினரும் சுயேட்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.