பொதுமக்களினது முறையற்ற கழிவகற்றல் செயற்பாடுகளின் காரணமாக , மட்டக்களப்பு மாநகரைச் சூழவுள்ள நீர் நிலைகள் மாசடைந்து வருவதனைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார பிரிவானது வாவிகளை அண்டிய சூழலைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
உக்காத பிளாஸ்டிக் பொருட்களையும், பொலித்தின் பைகளையும், மதுபானக் குவளைகளையும் வாவிகளினுள் வீசுவதனால் நீர் நிலைகள் மாசடைவதோடு அதனை அண்டி வாழும் மக்கள் பெரும் சுகாதார சீர் கேடுகளுக்கு முகங்கோடுக்க நேரிட்டுள்ளது.
அத்துடன் நீர் வாழ் உயிரினங்களும், கண்டல் தாவரங்களும் அழிந்து வரும் நிலையும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மாநகரின் தூய்மையினையும், நகரின் அழகையும் பேணும் வகையில் ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா (JICA) மற்றும் அவுஸ்திரேலியன் எயிட் ( Australian AID) தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையானது “தூய்மையான மாநகரம்” எனும் தொணிப்பொருளின் கீழ் வாவிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளை இன்று (01.12.2018) மேற்கொண்டது.
மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட சின்ன உப்போடை தொடக்கம் கல்லடி பாலம் வரையிலான பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகள், போத்தல்கள் மற்றும் பல உக்காத கழிவுப் பொருட்கள் போன்றன அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.