மாணவர்களின் சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் யாவும் இம்மாதம் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை இடை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் ஆரம்பிக்கப்படும் புதிய உயர்தர வகுப்புக்கள் அனைத்தும் பரீட்சை முடிந்து ஒரு மாத காலத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும். என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 22.10.2018 அன்று தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தமது கல்வி நிலையங்களில் கல்வி பயில வரும் மாணவர்களின் அடிப்படை சுகாதார வசதிகள், இருக்கை வசதிகள், போதிய வெளிச்சத்துடன் காற்றோட்டம் நிலவக் கூடிய சூழல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்யக் கூடிய வகையில் கல்வி நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் ஆரோக்கியமான சூழலில், ஈர்ப்புடனான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தனியார் கல்வி நிலையங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் நிம்மதியான மனோநிலையினை அடையும் வகையிலும் மாநகர சபையின் 06.12.2018 அன்று நடைபெற்ற 12 ஆவது சபை அமர்வில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானம் தொடர்பில் மாநகர ஆணையாளரால் உரிய கல்வி நிலையங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி தடையுத்தறவுக் காலத்திற்குள் குறித்த கல்வி நிலையங்களில் உட்கட்டுமான வசதிகளையும், மாணவர்களின் பாதுகாப்பினையும், சீரான கட்டண ஒழுங்குகளையும், உறுதிப்படுத்திய பின்னரே கல்வி நிறுவனங்களை மீழ ஆரம்பிக்க முடியும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.